தேர்த்திருவிழா-வர்ணனை

இணுவி ல் ஸ்ரீ பரராஜசேகரப்பிள்ளையார் கோவில் தேர்த்திருவிழா
இவ் வர்ணனையானது இணுவில் இணையத்தளத்தில் 2006இல் வெளி வந்தது சில மாற்றங்களுடன் இணைக்ப்படுகின்றது. கும்பாபிஷேக மலரிலும் காணப்படுகின்றது.
இலண்டன் மாநகரில் தற்போது வசித்துவரும் இணுவில் பரராஐசேகரப்பிள்ளையார் திருக்கோவில் தொண்டர் ஒருவர், கோவில் தேர்த்திருவிழாவை தனது மனக்கண்ணில் கொண்டுவந்தார். அன்றைய தினம் இப்போது என்ன நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது என்பதை, தாங்கள் இத்திருவிழாவில் கலந்து கொள்ள முடியவில்லையே என்ற ஏக்கப்பெருமூச்சுடன், ஆதங்கத்துடன் இப்படியொரு நேர்முகவர்ணனையாக கனிந்து உருகி, எமது இணையத்தளத்திற்கு எழுதியிருந்தார்.
தேர்த்திருவிழா
இப்பொழுது முதல் நீங்கள் அனைவரும் எம்முடன் தேர்திருவிழாவை காண்பதற்காக பல்லாயிரக்கணக்கான மையில்களை கடந்து எம்முடன் வாருங்கள். இப்பொழுது காலை வேளை பிள்ளையார் கோவிலுக்கு நாம் செல்கின்றோம்.
வீட்டில் இருந்து மெதுவாக சைக்கிளை மிதித்துக்கொண்டு கோவிலை நோக்கி போய்கொண்டிருக்கின்றேன். ஒலிபெருக்கியிலே ஓங்கார மூர்த்தியே என்ற பாடல் கேட்டுக் கொண்டிருக்கின்றது. இப்பொழுது கோவிலின் முன் வாசலுக்கு போய்விட்டேன்.
கோபுர வாசல். (மானிப்பாய் வீதி) குளக்கரைச் சந்தி தொடக்கம், பின் வீதி மற்றும் பின் ஒழுங்கை வரை, கோவில் வீதி முழுவதையும் உள்ளடக்கி மஞ்சள் பச்சை வண்ண மாவிலை தோரணங்களுடன் இடை இடையே குலை வாழை மரங்களும் கட்டப்பட்டு அழகாக காட்சி தருகின்றது. வழமையாக கோபுர வாசலிலே அமைக்கப்படுகின்ற பிள்ளையார் தண்ணீர் பந்தலும் சற்று நீளம் குறைவாக காணப்பட்டாலும் மிகவும் வடிவாக அமையப் பெற்றுள்ளது.
மதிய வெயிலின் சூட்டை தணிப்பதற்காக கோயிலின் வீதி முழுவதும் இரவிரவாக இறைத்த தண்ணீர் காலுக்கு குளிர்ச்சியாக இருக்கின்றது. இப்பொழுது காலை 05.30 ஒரு சிறுவன் கிட்டத்தட்ட 10 வயது மதிக்கதக்கவன் வந்து கும்பிட்டு விட்டு விபூதி தட்டில் இருந்து கொஞ்சத்தை கிள்ளி தன்னுடைய நெற்றியிலே பூசி, அச்சிறுவன் கடகடவென்று அங்கபிரதிஸ்டை செய்கிறான். (இந்த இடத்திலே ஒன்றை நிச்சயம் குறிப்பிடவேண்டும் யாழ்ப்பாணத்திலே நல்லூர் கந்தசாமி கோவிலை தவிர்த்து பார்த்தால் அங்கபிரதிஸ்டை செய்பவர்கள் எமது கோவிலிலே தான் அதிகமாக இருக்கும், என நான் நினைக்கின்றேன்) இவனைப் போல் சிறியவர்கள் முதல் இளைஞர்கள் அனைவரும் வந்து தமது அங்கபிரதிஷ்டையை ஆரம்பித்துவிட்டார்கள். பெண்களும் அடி அடித்து கொண்டிருக்கிறார்கள்.
காலை 6 மணி
மூல மூர்த்தியாகிய எம்பெருமான் விநாயகப் பெருமானுக்கு காலை 6 மணிக்கு அபிஷேகம் ஆரம்பமாகின்றது. பக்தர்கள் கொண்டுவந்த பால், இளநீர், தேன் எல்லாவற்றாலும் அபிஷேகம் செய்யப்பட்டு எம்பெருமானுக்கு பூசை ஆரம்பமாகின்றது. எம்பெருமானுடைய பெரிய காண்டாமணி ஓசையெழுப்பப்படுகின்றது.
விநாயகப் பெருமானுக்கு சந்தனக்காப்பு சாத்தப்பட்டு, பார்ப்பதற்கு மிகவும் அழகாக காட்சி தருகின்றார். தற்பொழுது ஆலய பிரதமகுரு அரவிந்த குருக்கள் அவர்கள் பஞ்சாலத்தி தீபம் காண்பிக்கின்றார். நாம் அனைவரும் சேர்ந்து கும்பிடுவோம்.
காலை 7 மணி
மூல மூர்த்திக்குரிய பூசையை தொடர்ந்து அனைத்து பரிவார மூர்த்திகளுக்கும் பூசைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. இப்பொழுது காலை 7 மணி கொடிதம்ப பூசை ஆரம்பமாகின்றது. இதே நேரத்திலே முன்வீதியிலே காவடிகள் பல வந்த வண்ணம் உள்ளன. இதைப் பார்க்கின்ற போது உங்களுக்கும் ஊரில் இருந்த போது காவடியாடிய பழைய நினைவுகள் வருகின்றதா? சரி மீண்டும் கோயிலுக்குள் செல்வோம் கொடித்தம்ப பூசை நிறைவு காண்கின்றது. குருக்கள் அவர்கள் சுத்துபல்லி செல்வதற்குரிய ஒழுங்குகள் செய்யப்படுகின்றன. எமக்கெல்லாம் ஞாபகம் இருக்கும் தவில் வித்துவான் “சிவகரன்” அவர்கள் அந்த சுத்துபல்லிக்குரிய தாளத்தை முன்னே வாசித்துக் கொண்டு செல்கிறார் பின்னாலே புதிதாக வடிவமைக்க பெற்ற பீடத்திலே சுத்துபல்லி வீதியை சுத்தி வந்து கொண்டிருக்கின்றது.
காலை 8 மணி
வசந்த மண்டப பூசை ஆரம்பமாகின்றது. வெள்ளிப் பீடத்திலே பஞ்சமுகப் பிள்ளையார் மிகவும் மிடுக்காக காட்சி தருகின்றார். அழகிய மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு வேழமுகத்து விநாயகனை தொழ வாழ்வு மிகுந்து வரும் என்பது போல் காட்சி தருகின்றார். அருகருகே தெய்வானை, வள்ளி சமேத முருகப்பெருமானும், சண்டேஸ்வரரும் வீற்றிருக்கின்றார்கள். தீய சக்திகளை எல்லாம் அழிப்பதாகிய தேர்த்திருவிழாவுக்கு எம்பெருமான் புறப்படுவதற்கு முன் குருக்கள் அவர்கள் அனைத்து கிரியைகளையும் தற்போது செய்து கொண்டிருக்கின்றார். தற்பொழுது வசந்த மண்டப பூசையின் நிறைவு பகுதியில் நாம் நிற்கின்றோம். பஞ்சபுராணம் ஓதப்படுகின்றது. தவில் நாதஸ்வர கலைஞர்கள் பலர் அணிவகுத்து நிற்கின்றார்கள். குருக்கள் அவர்கள் பஞ்சாலத்தி தீபத்தை காண்பிக்கின்றார். அடியவர்கள் அனைவரும் “அரோகரா அரோகரா” என்று விநாயகப் பெருமானை வணங்குகிறார்கள். தேங்காய் உடைக்கப்படுகின்றது. எம்பெருமான் தேருக்கு புறப்படுவதற்கு எழுந்தருளுகிறார். தவில் நாதஸ்வர கலைஞர்கள் மல்லாரி வாசிக்கிறார்கள் பூக்கள் துவப்படுகின்றன பக்தர்களது அரோகரா ஓசையும் பஜனை பாடுவர்களது தேவாரங்களும் கோயில் சூழலை பக்தி பரவசமாக்குகின்றது.
காலை 8.45 நிமிடம்
தற்பொழுது எம்பெருமான் யாகத்திலே நிற்கின்றார் தனியாக நாதஸ்வரத்திலே இராகம் வாசிக்கப்படுகின்றது. உள்வீதி அமைதியாக இருக்கின்றது. குருக்கள் அவர்கள் கை நிறைய பூவுடன் யாகசாலையை விட்டு வருகின்றார் மந்திரங்கள் ஓதப்படுகின்றது குருக்கள் அவர்கள் பூக்களை எம்பெருமானுக்கு சமர்ப்பித்துவிட்டு தீபம் காட்டுகின்றார் மீண்டும் மல்லாரி வாசிக்கப்படுகின்றது. எம்பெருமான் வெளிவீதிக்கு வருகின்றார். வெளியில் நிற்கின்ற பக்தர்கள் அனைவரும் தலைக்கு மேல் கைவைத்து பிள்ளையாரே அரோகரா அரோகரா என்று வணங்குகிறார்கள். தற்பொழுது பஞ்சமுகப் பிள்ளையார் தேரிலே ஏறுகின்றார். அவரை தொடர்ந்து முருகப்பெருமானும் சண்டேஸ்வரரும் அவர்களுக்குரிய தேரிலே ஏறுகின்றார்கள்.
காலை 9.30 நிமிடம்
பஞ்சமுகப் பிள்ளையாரின் தேருக்கு முன்பாக மலை போல் தேங்காய் குவிக்கப்பட்டுள்ளது. குருக்கள் அவர்கள் பஞ்சாலத்தி காண்பிக்கின்றார் தொண்டர்கள் அனைவரும் தேங்காய் உடைக்கின்றார்கள். சரியாக 9.30 மணிக்கு குருக்கள் அவர்கள் தேர் புறப்படுவதற்கான மணி ஒலி எழுப்புகின்றார். பக்தர்கள் அனைவரும் அரோகரா என்றவாறு தேரை இழுக்கின்றார்கள். தேர் மெதுவாக ஆடி அசைந்து இருப்பிடத்தை விட்டு கிளம்புகின்றது. முன்னே எம்பெருமான் விநாயகப் பெருமானுடைய பெரிய தேர் முன் செல்ல அதன் பின்னே ஒன்றன் பின் ஒன்றாக முருகப்பெருமானுடைய தேரும் சண்டேஸ்வரருடைய தேரும் செல்கின்றது. (இந்த இடத்தில் ஒன்றை குறிப்பிட வேண்டும் ஈழத்தில் இருக்கின்ற ஆலயங்களில் மூன்று தேரும் சிற்பவேலைப்பாடு செய்யப்பட்ட தேர் ஓடுகின்ற ஆலயங்களில் இதுவும் ஒன்று) வெளி வீதிகளிலே உள்ள எல்லைமான பந்தல்களிலே குவிக்கப்பட்ட தேங்காய்கள் உடைக்கப்படுகின்றது. தற்போது தேர் பஞ்சமுகப் பிள்ளையார் வாசலிலே நிற்கின்றது. பஞ்சமுகப் பிள்ளையார் வாசலிலே புதிதாக அமைக்கப்பெற்ற கோபுரம் மிகவும் அழகாக காணப்படுகின்றது. தேர் மெல்ல மெல்ல நகருகின்றது. தேருக்கு பின்னாலே கிட்ட தட்ட 60, 70 பேர் அங்கப் பிரதிஸ்டை செய்கிறார்கள். பெண்கள் அடி அடிக்கிறார்கள் சிறுவர்கள் பெரியவர்கள் எல்லோரும் இணைந்து பஜனை பாடுகின்றார்கள்.
தற்பொழுது தேர் பின் வீதியிலே நிற்கின்றது. புதிதாக கட்டப்பட்ட அன்னதான மண்டப வாசலிலே தேங்காய் உடைக்கப்பட்டு படையல் செய்யப்படுகின்றது. பிள்ளையார் தண்ணீர்பந்தல் தொண்டர்கள் அடியார்களது தாகத்தை போக்குவதற்காக குளிர்ச்சியான பானத்தை வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். தேர் மெல்ல மெல்ல அசைந்து வடக்கு வீதிக்கு வருகின்றது. வடக்கு வீதியிலே மேளச்சமா களைகட்டுகின்றது. குருக்கள் அவர்கள் மணி எழுப்புகின்றார் தேர் மெதுவாக அசைந்து நாம் எல்லோரும் படித்த எங்கள் பள்ளிக்கூடத்துக்கு முன்னால் தேர் வந்து நிற்கின்றது.
பாடசாலை அதிபர் என நினைக்கின்றேன் கையிலே அர்ச்சனை தட்டுடன் தேரை நோக்கி வருகின்றார். பள்ளிக்கூட எல்லைமானப் பந்தலிலே சுண்டல் கொடுக்கின்றார்கள்.
நண்பகல் 12 மணி
தேர் மெதுவாக அசைந்தாடி வந்து சரியாக 12 மணிக்கு எம்பெருமான் விநாயகப் பெருமான் தன்னுடைய இருப்பை வந்தடைகிறார். கோயில் பெரிய மணி அடிக்கின்றது. அடியார்கள் அர்ச்சனை செய்வதற்காக ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு வந்த அர்ச்சனை செய்கிறார்கள்.
ஒலிபெருக்கியிலே அன்னதானம் ஆரம்பமாகிவிட்டது என்ற அறிவிப்பு வருகின்றது. வாங்கோவன் நாங்களும் ஒருக்கா சாப்பிட்டு வருவம்.
மாலை 4.00 மணி

சுவாமி தேரலிருந்து இறங்கி தீர்த்த மண்ணடபத்தில் இளைப்பாறுகின்றார். நாதகானங்கள் எண்ணற்ற கணக்கில் ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கின்றது. இசையை இரசித்த வண்ணம் இசைரசிகர்கள் பூஜையையும் மறந்து இரசித்தவண்ணம் உள்ளார்கள்.
ஊஞ்சல் பாட்டினைடிதாடர்ந்து எம்பெருமான் பஞ்சமுக விநாயகன் பன்னீரில் நனைகின்றான் சுவாமியைச்சுற்றி சிறுவர்கள் கூட்டம் பன்னீரில் நனைவதற்கு பின்னர் உள்வீதியில் சுவாமி இறங்கி மாலை 6.300 மணிக்கு அபிஷேகம் நடைபெறுகின்றது.
இரவு 7.30 மணிக்கு
தேரடி பார்ப்பதற்காக எம்பெருமான் வெளிவீதிக்கு வருகிறார். சரி எப்ப நாங்கள் எல்லாரும் ஒன்றாய் கூடி திருவிழா பார்ப்பது என்ற ஏக்கம் உங்கள் எல்லோர் மனதிலும் எழும் பிள்ளையார் எங்களை கைவிடமாட்டார் அடுத்தமுறை தேருக்கு நாம் அனைவரும் ஊருக்கு போவோம் என்று நம்புவோம். நம்பிக்கை தானே வாழ்க்கை.
என்ன வாசகர்களே ஊருக்கு வந்து திருவிழா பார்த்த மாதிரி இருக்கா. வாங்கோ நாளைக்கு தீர்த்தத்துக்கு போவம்.
நேரடி வர்ணனை
விநாயக அடியார்.

திரு.கா.திலீபன்
(இலண்டன்)
https://www.facebook.com/inuvilinfo/posts/812077215552489
http://www.inuvilinfo.com

No comments:

Post a Comment