Showing posts with label எங்கட கோவில் கொடியேற போகுது. Show all posts
Showing posts with label எங்கட கோவில் கொடியேற போகுது. Show all posts

Saturday, April 13, 2013

எங்கட கோவில் கொடியேறப் போகுது


மடத்துவாசல் பிள்ளையார் கோயில் கொடியேற இரண்டு, மூன்று மாதங்களுக்கு முன்னரேயே ஊர் உலகமெல்லாம் பரவிவிடும்  பிள்ளையாரின்  திருவிழாக்காலம் தொடங்கிவிட்டால் கொழும்பு,மற்றும் பிற பகுதிகளில் பணி நிமித்தம் சென்றவர்களும் பத்து நாள் திருவிழாவுக்கு விடுப்பு எடுத்து வந்துவிடுவார்கள். இந்த நிலை இப்போது எல்லை கடந்து வெளிநாடு வரை வந்துவிட்டது.




 உலகத்தின் மூலை முடுக்கெங்கும் இருக்கும் இணுவில் சனம் தங்கள் வீட்டுக் கொண்டாட்டம் போலப் பிள்ளையாரின் மகோற்சவம் காண வந்துவிடுவார்கள். அதுவும் மடத்துவாசல் பிள்ளையார் கோயில் கொடியேறிவிட்டால் போதும், போட்டது போட்டபடி அப்படியே நிற்க, தேர், தீர்த்தம் கண்டு தான் மறுவேலை.



ஊரில் இருக்கும் பெடியளுக்கு முந்திய வருஷத்தின் தீர்த்தோற்சவம் அன்றே அடுத்த வருஷத் திருவிழா எப்படி இருக்கவேணும் என்று ப்ளான் போட ஆரம்பித்து விடுவார்கள். கொடியேற்ற காலம் அண்மிக்க அண்மிக்க, கோயிலைச் சுற்றியுள்ள பரப்பெல்லாம் துப்பரவு செய்து புல், பூண்டு இல்லாத தேசமாக்கிவிடுவார்கள். திருவிழா ஆரம்பித்துப் பத்து நாள் நடக்கும் போது காலையில் இருந்து மாலை வரை கண்ணும் கருத்துமாக ஆலய சேவை செய்வார்கள்.அந்தக் காலத்தில் திருவிழாக்காலங்கள் இன்றைக்கும் என் மனக்கண்ணில் மங்கலாக இருக்கின்றது. கோயிலின் முன்புறம் எல்லாம் சப்பரப் பந்தல் அமைத்து கலர் கலராக ட்யூப் லைட் எல்லாம் போட்டு, நிலமெல்லாம் குருமணல் பரப்பி ஆலயச் சூழலே கடற்கரை மணலில் கால்பதிப்பது போல இருக்கும்.
Add caption
திருவிழாக்காலங்களில் கதாப்பிரசங்கங்களுக்கும், பாட்டுக் கச்சேரிகளுக்கும் அப்போது குறைவில்லை. திருமுருக கிருபானந்த வாரியார், சுந்தராம்பாள், பாலமுரளி கிருஷ்ணா, என்று நம்மூருக்கு வந்து போன பிரபலங்களில் இருந்து கம்பவாருதி ஜெயராஜ் இன் கம்பராமாயணத் தொடர் சொற்பொழிவு வரை அந்தக் காலம் இருந்தது. இடைப்பட்ட காலம் போரோடு போராடி திருவிழா நடத்தும் காலமாயிற்று. எங்கள் ஊரைப் பொறுத்தவரை ஆன்மீகமாகட்டும், பொழுதுபோக்கு ஆகட்டும், சமூக ஒன்றுகூடல் ஆகட்டும் எல்லாமே கோயிலைச் சுற்றித் தான். ஆலய முகப்பிலேயே கிடுகால் வேய்ந்த பந்தல் அமைக்கப்பட்டு தண்ணீர்ப்பந்தல் வந்துவிடும்
ஆலயத்தின் இன்னொரு புறம் வருஷம் 355 நாட்கள் மூடப்பட்டிருக்கும் தேனீர்க்கடை அந்தப் பத்து நாளும் கதவு திறந்து சுண்டல் வாசம் வா வா பக்கம் வா என்றழைக்கும். கடலைக்காறியில் இருந்து ஐஸ்கிறீம் வண்டிகளும், இனிப்புக் கடைக்காரர்களும் பத்து நாட்கள் முகாமிட்டு விடுவார்கள்.

கோயில் திருவிழா என்பது ஆன்மீகத் தேடலாகவும், அதே சமயம் எல்லோரும் கூடி மகிழ்ந்துபேசும் களமாகவும் அன்றிலிருந்து தொடர்கின்றது. எங்கள் ஊரில் இருந்து புலம்பெயர்ந்தவர்களில் கணிசமானவர்களைக் காணவேண்டும் என்றால் இந்தக் கொடியேற்றம் ஆரம்பித்து தேர், தீர்த்தம் காலம் வரையான மகோற்சவ காலமே உகந்த தருணம்.. பதினாறு வருஷங்களுக்குப் பிறகு கடந்த ஆண்டு மடத்துவாசல் பிள்ளையார் கோயில் தேர்த்திருவிழா காணச் செல்கிறேன். உள்ளூரில் இருந்து அயலூர், வெளியூர் என்று கனத்த சனக்கூட்டம். உட்பிரகாரத்தில் இருக்கும் பேரிகைகள் முழக்கம் ஓய்ந்து சுவாமி உள்வீதி வலம் வந்து தேரில் ஏற வரும் நேரம். எல்லோர் வாயிலும் பிள்ளையாரப்பா பிள்ளையாரப்பா என்ற உச்சரிப்பு மெல்ல மெல்ல உரப்பாக ஒலிக்கிறது.
பிரதட்டைக்காரர்கள் ஒரு புறம், கற்பூரச் சட்டிகளுடன் பெண்கள், காவடிக்காரர் இன்னொரு புறம், மேள, நாதஸ்வரக்காரர் நேர் முன்னே.
  இவையெல்லாம் கடந்து மலையாகக் குவித்து வைக்கப்பட்டிருக்கின்றன தேங்காய்க்கூட்டம். தேங்காய்களை எப்போது அடித்துத் துவம்சம் பன்ணலாம் என்று ஆளாளுக்குக் இருகைகளிலும் தேங்காய்களை வைத்திருக்கும் இளையோர்
. ஓரமாய் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்த நான் கூச்சம் விலகி விறுவிறுவென ஓடிப்போய் இரண்டு தேங்காய்களைப் பொறுக்கவும் ஆளாளுக்குத் தேங்காய்களைக் குறிபார்த்து அடிக்கவும் சரியாகவிருக்கின்றது
படபடவென்று ஓங்கி அடிக்கிறோம் தேங்காய்களை. புது வேஷ்டி எல்லாம் மண்ணின் சேறும் இளநீரும் கலந்த வெதுவெதுப்பு உடம்பெல்லாம் நீராபிஷேகம். இதையெல்லாம் பார்த்துச் சிரித்துக் கொண்டே கடப்பது போல மெல்ல மெல்ல மக்கள் அலையில் மிதந்து தேரில் ஏறி உலாவரத் தயாராகிறார் எங்கட பிள்ளையார்.










                                           "மடத்துவாசல் பிள்ளையாரடி" http://kanapraba.blogspot.com/